ஒவ்வொரு வேலை செய்யும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய 5 சட்டங்கள்

Last updated 17 Mar 2018 . 1 min readLaws for Working Women India Laws for Working Women India

பல ஆண்டுகளாக, வேலை செய்யும் நபர்கள் மற்றும் இந்திய பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் சில பெண் பணியாளர்களுக்கான சிறப்பு அம்சங்களை வரையறுக்கிறது. சமீப காலங்களில், பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் துறைகளான ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் போன்றவை காரணமாக, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டிலும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காண்கிறோம்.

வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கான இந்திய தொழிலாளர் சட்டங்கள்

இன்றைய தேதியில் இந்தியாவில் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் உள்ளன, அவை எல்லா தொழிலாளர்களுக்கும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) நன்மைகளையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன. இருப்பினும், இந்த கட்டுரைக்காக, நாம் சில முக்கியமான சட்டங்களைத் தொட்டுச் செல்வதுடன், இந்த சட்டங்களின் சாராம்சத்தையும் வழங்கியுள்ளோம்.

நமது மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோதி அவருடைய ஒரு உரையில் குறிப்பிட்ட படி, பெண்கள் மக்கள்தொகையில் 50% உள்ளனர் மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலை செய்யவில்லையெனில், நமது நாடு நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் ஒருபோதும் வளராது, அந்த காரணத்தினால் தான், அரசாங்கம் இந்தியாவின் வரலாற்றில் பெண்களின் பெரும் பங்களிப்பை உறுதிப்படுத்த சட்டங்களை இயற்றவும் திருத்தவும் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டுள்ளது.

#1. மகப்பேறு விடுமுறைச் சட்டம், 1961 (“மகப்பேறு விடுமுறை சட்டம்”)

குழந்தைப் பேறு விடுமுறைச் சட்டம் என்பது ஒவ்வொரு தொழிலகம், தொழிற்சாலை அல்லது சுரங்கம், மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தில்லாமல், பெண்களை பணியில் அமர்த்தியுள்ள எல்லா கடைகள் மற்றும் நிறுவனங்கள் அல்லது 10க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் என அனைத்திலும் பெண்களின் வேலைவாய்ப்பினை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டமாகும். மகப்பேறு விடுமுறைச் சட்டத்தின் நோக்கம் எல்லா தொழிற்சாலைகளிலும் பெண்களுக்கு ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறைக்கான நெறிமுறைகளைக் கொண்டு வருவதாகும். மற்ற விஷயங்களில் இந்த சட்டம் பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:

 1. எந்த பெண் பணியாளருக்கும் 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சலுகைகள். இந்த விதிமுறை முதல் இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுமுறைச் சலுகை 12 வாரங்கள் மட்டுமே ஆகும். மகப்பேறு விடுமறை (திருத்தம்) சட்ட வரைவு, 2016 ஆனது மக்களவையால் 9வது மார்ச் 2017 அன்று இயற்றப்பட்டது, சில மாதங்களுக்குப் பின் மாநிலங்களை ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் இந்தியா மகப்பேறு விடுமுறை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில், கனடா மற்றும் நார்வேவை அடுத்து உள்ளது, அங்கு மகப்பேறு விடுமறை நாட்கள் முறையே 50 மற்றும் 44 வாரங்களாகும்

 2. பெண் பணியாளர் கர்ப்பம், குழந்தைப் பிறப்பு அல்லது கருச்சிதைவு காரணமாக ஏற்படும் ஏதேனும் நோய்களால் வருந்தும் போது 1 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.

 3. பணிவழங்குநரால் எந்த பேறுகாலத்திற்கு முன்பும் பின்பும் எந்த பராமரிப்பும் வழங்கப்படவில்லையெனில், பெண் பணியாளர் ரூ 2500லிருந்து ரூ 3500 வரையில் மருத்துவ உதவித் தொகை பெறவும் உரிமை பெற்றுள்ளார்.

 4. ஒரு பெண், பேறுகாலத்தின் போது இறந்தால், மகப்பேறு சலுகைத் தொகையினை அவள் இறந்தநாள் வரையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்க வேண்டும். தாயைத் தொடர்ந்து குழந்தையும் இறந்தால், அச்சலுகைகள் குழந்தை இறக்கும் நாள் வரையில் வழங்கப்பட வேண்டும்.

 5. மகப்பேறு சலுகை தொகையானது அவளது பேறுகாலத்திற்கு முன்பு முன்பணமாக வழங்கப்பட வேண்டும், பணியாளர் அவள் கர்ப்பமாக இருக்கும் ஆதாரத்தைக் காட்டியவுடன் இது வழங்கப்பட வேண்டும், மீதமுள்ள தொகை அவள் குழந்தை பிறந்து விட்டதற்கான ஆதாரத்தைக் காட்டியதிலிருந்து 48 மணிநேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.

 6. குழந்தை பிறப்பின் போது பணியாளர் இறந்து விட்டால், மகப்பேறு சலுகைகள் அவர் நியமித்த நபருக்கு வழங்கப்பட வேண்டும், யாரும் நியமிக்கப்படவில்லையெனில் அவளது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் வழங்கப்பட வேண்டும்.

மகப்பேறு சலுகை சட்டம், 1961 கீழ் வேலை வழங்குநர் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

 1. எந்த வேலை வழங்குநரும் எந்த பெண்ணையும் அவளது பேறு காலம், அல்லது கருச்சிதைவு அல்லது மருத்துவரீதியான கருக்கலைப்பைத் தொடர்ந்து வரும் 6 வார காலகட்டத்தில் தெரிந்தே வேலைக்கு அமர்த்தக் கூடாது.

 2. எந்த பெண்ணும் அவளது பேறு காலம், அல்லது கருச்சிதைவு அல்லது மருத்துவரீதியான கருக்கலைப்பைத் தொடர்ந்து வரும் 6 வார காலகட்டத்தில் வேலைக்கு செல்லக் கூடாது.

 3. எந்த கர்ப்பிணிப் பெண்ணும், அவள் கேட்டுக் கொண்டதற்காகவோ, அவளது வேலை வழங்குநர் கேட்டுக் கொண்டதற்காகவோ எந்த கடினமான இயல்பு கொண்ட, நீண்ட நேரம் நிற்பது போன்ற, அல்லது அவளது கர்ப்பம் அல்லது கருவின் இயல்பான வளர்ச்சியில் குறுக்கிடுவது போன்ற, அல்லது கருச்சிதைவுக்கு காரணமாகின்றன அல்லது அவளது உடல்நலத்தைப் பாதிக்கும் எந்த விதமான வேலையிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது.

 4. பெண் பணியாளர் மகப்பேறு விடுப்பில் இருக்கும் போது, வேலை வழங்குநர் அவளை வேலையை விட்டு நீக்க முடியாது.

#2. பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (பாதுகாப்பு, தடுப்பு, மற்றும் தீர்வு) சட்டம், 2013 (“SHA”)

பணியில் பாலியல் துன்புறுத்தல் என்பது அரிதானது அல்ல மேலும் நாம் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிகழ்வுகளைக் கண்டுள்ளோம். இறுதியாக இந்தியா பணியிடத்தில் பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டத்தை 2013ல் இயற்றியது. இந்த சட்டம் உச்சநீதிமன்றம், விஷாகா மற்றும் பிறர் எதிர். இராஜஸ்தான் அரசு (விஷாகா தீர்ப்பு) விஷயத்தில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு வழங்கியதற்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு இயற்றப்பட்டுள்ளது. விஷாகா தீர்ப்பு ஒவ்வொரு பணி வழங்குநரும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வுகான ஒரு ஒழுங்குமுறையினை கட்டாயம் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது மேலும் வேலை செய்யும் பெண்களில் பாலியல் சம உரிமையையும் நடைமுறைப்படுத்துகிறது (வழிகாட்டுதல்கள்). பாலியல் துன்புறத்தல் சட்டம் இயற்றப்படும் வரையில், நிறுவனங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பெரும்பாலான நிகழ்வுகளில், அவை பின்பற்றப்படவில்லை. பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை இயற்றியது பெண் பணியாளர்களுக்கு மிகவும் தேவையான உதவியைக் கொண்டு வந்தது.

பாலியல் துன்புறுத்தல் சட்டத்திலுள்ள பாலியல் துன்புறுத்தலுக்கான வரையறை விஷாகா தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் வரையறையை ஒத்துள்ளது மேலும் எந்த வரவேற்கப்படாத பாலியல் நோக்குள்ள நடத்தையையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாலியல் துன்புறுத்தலில் சேர்க்கிறது:

 • உடல் தொடுகை மற்றும் முன்னேற்றங்கள்,

 • பாலியல் விருப்பங்களுக்காக கட்டாயப்படுத்தல் அல்லது கோரிக்கை விடுத்தல்,

 • பாலியல் வண்ணக் கருத்துகள்,

 • ஆபாசப் படங்களைக் காட்டுதல்,

 • அல்லது எந்த வரவேற்கப்படாத பிற உடல், சொல், அல்லது சொற்களில்லா பாலியல் இயல்புள்ள நடத்தை.

பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாளுவதுடன், பணி வழங்குநர் பின்வரும் கடமைகள் கொண்டுள்ளார்:

 • பாதுகாப்பான பணிச்சூழ்நிலையை வழங்குதல்,

 • பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதால் வரும் சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் உள் புகார் குழுவின் (ICC) அமைப்பு பற்றிய விவரங்களை முக்கியமாக காட்சிப்படுத்தல்,

 • பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து உணர்த்த பயிற்சிப்பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மேலும் ICC உறுப்பினர்களுக்கு அறிமுக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்,

 • பாலியல் துன்புறுத்தலை பணி விதிமுறைகளின் கீழ் தவறாகக் கருதி தவறுக்கான நடவடிக்கை எடுத்தல்.​ 

#3. தொழிற்சாலை சட்டம், 1948 (“தொழிற்சாலைகள் சட்டம்”)

தொழிற்சாலை சட்டம் என்பது தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் உடல்நலம், பாதுகாப்பு, நலஉதவி, முறையான வேலை நேரம், விடுமுறை மற்றும் இதர சலுகைகளைப் பெறுவதற்கான சட்டம் ஆகும். தொழிற்சாலைகள் சட்டம் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் பணிவழங்குநர்களால் நேர்மையற்ற சுரண்டல்களுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் பெண் தொழிலாளர்களுக்கென்று சிறப்பு சட்டப் பிரிவையும் கொண்டுள்ளது.       

 1. தொழிற்சாலைகள் சட்டம் எல்லா வயது வந்த தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை நிர்ணயிக்கிறது. மேலும் அது பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் அளிக்கிறது.

 2. அது வேலை நாளின் போது இடைவெளி, வார விடுமுறை, ஆண்டு விடுமுறை தொடர்பான சட்ட விதிகளையும் கொண்டுள்ளது.

 3. பொதுவாக, தொழிற்சாலைகளில், வேலையானது ஷிப்ட் அடிப்படையில் நடைபெறுகிறது, எனவே பணியாளர்கள் இரவு நேரத்தில் வேலை செய்யும் தேவையுள்ளது. இருப்பினும், இரவு நேரப் பணிகள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். கூடுதலாக ஷிப்ட் நேரம் மற்றும் வேலை நேரம் நிர்வாகத்தால் முன்பே நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

 4. 6 a.m. முதல் 7 p.m வரையிலான நேரத்தைத் தவிர பிற நேரங்களில் பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. மாநில அரசுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நேர வரம்பை மாற்றிக் கொள்ளலாம், ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பெண் தொழிலாளர்கள் 10 p.m. முதல் 5 a.m வரையில் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

 5. வார விடுமுறை அல்லது பிற விடுமுறைகளுக்கு பிறகே தவிர இடையில் பெண் தொழிலாளர்களின் ஷிப்ட் நேரத்தை மாற்ற முடியாது. எனவே, பெண் தொழிலாளர்கள் தங்களின் ஷிப்ட் மாறுதல் குறித்து குறைந்தது 24-மணிநேரங்கள் அறிவிப்பினைப் பெற உரிமை பெற்றுள்ளார்கள்

 6. தீங்கு விளைவிக்கும் பணிகளில் ஈடுபட பெண் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர், எடுத்துக்காட்டாக பருத்தியைப் பறிக்கும் வேலையில், அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட சுமை குறித்த வரம்பு உள்ளது.

 7. தொழிற்சாலைகள் சட்டம், 30 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தும் பணிவழங்குநர்கள், பெண் தொழிலாளர்களின் 6 மற்றும் அதற்கு கீழ் வயது கொண்ட குழந்தைகளை வைத்துக் கொள்ள கிரச்சுகள் வழங்க வேண்டும் என்று வரையறுக்கிறது.

 8. தொழிலாளர்களுக்கு தொழிற்சாலையில் வழங்க வேண்டிய வேறு பிற வசதிகளான பெண்களுக்கு துவைக்கும் மற்றும் குளிக்கும் வசதி, கழிவறை (பெண்களுக்கு தனியான சிறுநீர் மற்றும் கழிவறை), ஓய்வறைகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றையும் உள்ளன.

மாநில அரசுகள் தொழிற்சாலைகள் சட்டப் பிரிவு திருத்தங்களுக்கான அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடுகின்றன, அவை அந்த குறிப்பிட்ட மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டாக, 1வது டிசம்பரில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகாராட்டிரா தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டவரைவு, 2015க்கு ஒப்புதல் அளித்தார், அது, பெண் தொழிலாளர்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அனுமதியளிக்கிறது. திருத்தற்கு முன்பு வரை, தொழிற்சாலைகள் சட்டம் இரவு நேரப் பணியில் 7 PM முதல் 6 AM வரை பெண் தொழிலாளர்கள் வேலை செய்வதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டத் திருத்தம், இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை தொழிற்சாலை நிர்வாகம் உறுதிப்படுத்துவதையும் கட்டாயமாக்குகிறது.

#4. சம ஊதியச் சட்டம், 1976 ("சம ஊதியச் சட்டம்")

நாம் அவ்வப்போது ஆண்களை விட பெண் தொழிலாளர்கள் குறைவான சம்பளம் பெறுகின்ற ஊதியப் பாகுபாடு நிகழ்வுகள் பற்றி கேள்விப்படுகிறோம் மற்றும் பார்க்கிறோம். உலகம் முழுவதிலும், வளர்ந்த நாடுகளிலும் இதுதான் நிலை. நமது அரசியலமைப்பின் பிரிவு 39 அரசாங்கம் குறிப்பாக ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பான கொள்கைகள் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது,

சம ஊதியச் சட்டப்படி:

 • பணிவழங்குநர்கள் ஒரே வேலையை அல்லது ஒத்த வேலையைச் செய்யும் ஆண் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

 • குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டரீதியான தடை இல்லாத வரையில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது வேலை வழங்குநர்கள் ஆண் பெண் என்று வேறுபடுத்தக் கூடாது.​ 

#5. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் (“SEA”)

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்கான கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை இயற்றுகின்றன, அச்சட்டங்கள் கடைகள் அல்லது பிற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நிலையை ஒழுங்குபடுத்துகின்றன. SEAகள் பல்வேறு சட்டவிதிமுறைகளை வழங்குகிறது அவற்றில் (a) வேலை நீக்கத்திற்கான அறிவிப்பு காலகட்டம், (b) விடுப்பு உரிமை, மற்றும் (c) வாராந்திர வேலை நேரம், வார விடுமுறை, கூடுதல் நேரம் போன்ற வேலை நிலைகள் போன்றவை அடங்கும்.

மாகாராட்டிர கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1948 (“MSEA”) மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும் சட்டமாகும், அதேவேளையில் தில்லி கடைகள் மற்றும் நிறுவனச் சட்டம், 1954 தில்லி மாநிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு பொருந்தும் சட்டம் ஆகும்

இருப்பினும், பணி இயல்பு காரணமாக குறிப்பிட்ட தொழிலகங்களில், பெண் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியிருக்கலாம், அதற்காக அவர்கள் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் இரவில் பணி செய்வதற்கான அனுமதியானது, பணி வழங்குநர் தரப்பில், பாதுகாப்பான பணிச் சூழலை வழங்குதல், இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்குதல், பிந்தைய வேலை நேரங்களுக்கு பிறகு அவர்களுடைய வீடுகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்குதல், பெண் தொழிலாளர்கள் குழுவாக இரவில் வேலை செய்ய வேண்டும் தனியாக அல்ல போன்ற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. IT துறை சமீபத்தில் அதிவேக வளர்ச்சியடைந்துள்ளது மேலும் இந்த துறை பெரும் ஆள்பலத்தைக் கொண்டுள்ளது. நாம்  IT துறையில் ஆணும் பெண்ணும் சம அளவில் வேலை செய்வதைக் காண்கிறோம், மேலும் அவர்கள் தங்களின் ஷிப்ட் வேலைக்காகவும், உலகம் முழுவதும் உள்ள நேர வேறுபாடுகள் கொண்ட நாடுகளுக்கு சேவையாற்றவும் இரவில் பணியாற்றுகிறார்கள். இந்த துறையில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக SEA கீழ் உள்ள விதிமுறைகள் தவிர, மாநில அரசுகள் அவற்றின் தனித்த IT/ITES கொள்கைகள் கொண்டுள்ளன, அவை இரவு நேரத்தில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிவழங்குநர் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அளவீடுகளைக் குறிப்பிடுகிறது.

பிற சட்டங்கள்

மேற்குறிப்பிட்ட சட்டங்கள் தவிர, தொழிலாளர்களின் நலம் மற்றும் பாதுகாப்பிற்கான பிற சட்டங்களும் உள்ளன. கூடுதலாக, பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் பல்வேறு சட்டங்களான தொழிலாளர் வைப்பு நிதி & பிற வசதிகள் சட்டம், 1952; தொழிலாளர் அரசு காப்பீடு, 1948; பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972; சலுகை ஊதியச் சட்டம், 1965, போன்ற சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.

டெப்லினா சென்
நிறுவனர், அட்வண்ட் ஜூரிஸ்

டெப்லினா அட்வண்ட் ஜூரிசின் நிறுவனர் ஆவார். அவர் மகாராட்டிரா & கோவா பார் கவுன்சிலில் 2006லிருந்து பதிவுசெய்துள்ளார். இதற்கு முன் அவர் மும்பையிலுள்ள ஒரு பிரபல சட்ட நிறுவனத்தில் பெருநிறுவன துறையின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவர் கார்ப்ரேட் சட்டங்களில் பரந்த அனுபவம் கொண்டுள்ளார், அவரது பயிற்சித் துறைகளில் கேப்பிட்டல் சந்தைகள், வேலைவாய்ப்பு, பொது கார்ப்ரேட் மற்றும் இந்திய வணிகச் சட்டம் ஆகியவை அடங்கும்..

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை குறிப்பு நோக்கத்திற்கான பொதுமக்களின் ஆர்வத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான அல்லது தொழில்முறை சட்ட ஆலோசனைக்கு மாற்று இல்லை. நாங்கள் எந்த பிழைகள் அல்லது விடுதல்களுக்கும் சட்டப் பொறுப்பினை ஏற்கவியலாது. இந்த கட்டுரையைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பும் கண்டிப்பாக குறிப்பிட்ட சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும்.


15204138941520413894
SHEROES
SHEROES - lives and stories of women we are and we want to be. Connecting the dots. Moving the needle. Also world's largest community of women, based out of India. Meet us at www.sheroes.in @SHEROESIndia facebook.com/SHEROESIndia


Share the Article :